தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது கார் பந்தயத்தில் ஆர்வத்துடன் கவனம் செலுத்தி வருகிறார். குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசிங்கில் முழுமையாக கவனம் செலுத்தி வரும் அஜித் அடுத்ததாக நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ஏகே65 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு தொடங்கி தீவிரமாக கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வரும் அஜித், தனது சொந்த பந்தய நிறுவனமான அஜித்குமார் ரேசிங் என்பதையும் தொடங்கியுள்ளார். இந்த அணி துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடந்த பந்தயங்களில் பங்கேற்று வெற்றிகளை பெற்றுள்ளது. குறிப்பாக ஸ்பெயினில் நடைபெற்ற கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்று பெருமை பெற்றது.
சமீபத்தில், ஆசிய லீ மான்ஸ் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேசிங் பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில், அஜித்துடன் முன்னாள் எப்-1 வீரர் நரேன் கார்த்திகேயனும் இணைகிறார். இதற்காக பயன்படுத்தப்படும் புதிய LMP3 ரேஸ் காரை அஜித் குமார் மற்றும் நரேன் கார்த்திகேயன் இணைந்து அறிமுகப்படுத்தினர். அந்த புகைப்படங்களை அஜித்குமார் ரேசிங் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.