இந்த ஆண்டு மோகன்லால் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அதே நேரத்தில், அவர் 20–30 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த படங்களும் மீண்டும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அந்த வகையில் மோகன்லாலின் சூப்பர் ஹிட் படங்களான ஸ்படிகம், தேவதூதன், மணிசித்திரதாழ், சோட்டா மும்பை ஆகிய நான்கு படங்கள் ஏற்கனவே இந்த ஆண்டில் ரீ–ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிபெற்றன.
இப்போது 2001 ஆம் ஆண்டு மோகன்லால் இரட்டை வேடத்தில் நடித்த ராவண பிரபு திரைப்படம் 4K டிஜிட்டல் வடிவத்தில் ரீ–ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அக்டோபர் 10ஆம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஞ்சித் இயக்கிய இந்த படத்தில் வசுந்தரா தாஸ் கதாநாயகியாக நடித்திருந்தார். நெப்போலியன் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றினார். மேலும், ராவண பிரபு திரைப்படம் 1993 ஆம் ஆண்டு மோகன்லால்–ஐவி சசி கூட்டணியில் உருவான தேவாசுரம் படத்தின் தொடர்ச்சியாக உருவானது என்பதும் குறிப்பிடத்தக்கது.