ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ள படம் டீசல். இந்தப் படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். ஹரிஷ் ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். மேலும் வினய் ராய், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், விவேக் பிரசன்னா, சச்சின் கெடேகர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். எம்.எஸ். பிரபு மற்றும் ரிச்சர்ட் என். நாதன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளனர். இப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படம் குறித்து இயக்குநர் சண்முகம் முத்துசாமி கூறுகையில்: “டீசல் மக்களுக்காக உருவாக்கப்பட்ட படம். இன்று எரிபொருளைத் தவிர்க்க முடியாத நிலை உருவாகி விட்டது. 1970க்குப் பிறகுதான் பெட்ரோல், டீசல் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இந்தியர் ஒருவர் சம்பாதிக்கும் 100 ரூபாயில் 70 ரூபாய் எரிபொருளுக்கே செலவாகிறது. ஆனால் அதற்குப் பின்னால் உள்ள விலை ஏற்றத் தாழ்வு அரசியல் பற்றி பொதுமக்களுக்கு தெரியாது.
இந்தச் சூழ்நிலையில், டீசல் உலகின் அடிநிலையிலிருந்து ஒரு ஹீரோ உருவாகிறார். அந்த ஹீரோவின் கதையின் மூலம் இந்த பிரச்சனையைச் சொல்லியிருக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களின் பார்வையில் இருந்து இந்தக் கதையை வெளிப்படுத்தியுள்ளேன். எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும், அதை வணிக ரீதியாக சொல்ல வேண்டும். எளிய மக்களுக்கு எளிமையாகச் சொல்ல வேண்டும். அதை நான் பொறுப்புடன் செய்துள்ளேன்” எனக் கூறினார்.