‘டாணாக்கரன்’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த தமிழ் இயக்குனர், தற்போது ‘மார்ஷல்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கன், ஈஸ்வரி ராவ் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் ஐ.வி.ஒய். என்டர்டெயின்மென்ட் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றன. 1960-களின் காலக்கட்டத்தை மையமாகக் கொண்டு ராமேசுவரத்தில் கதை அமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ராமேசுவரத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக 1960-களின் காலத்தை பிரதிபலிக்கும் வகையில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், “இந்த காட்சிகளை பார்ப்பவர்கள் அனைவரும் நிச்சயம் 1960-களின் காலத்திற்கு சென்றுவிட்டது போல உணர்வார்கள்” என தெரிவித்துள்ளார்.