இயக்குனர் வசந்த் இயக்கத்தில், 2000ஆம் ஆண்டு வெளியான படம் ரிதம். இந்தப் படத்தில் அர்ஜூன், மீனா, ரமேஷ் அரவிந்த், ஜோதிகா, நாகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ள இந்தப் படம், வெளிவந்த இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறது. இப்படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களுக்கும் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியிருந்தார்.

இந்த ரிதம் படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர்,
“கால் நூற்றாண்டு கடந்தபின்னும் ரிதம் படப் பாடல்கள் இன்னும் கொண்டாடப்படுவதை புன்னகையுடன் பார்க்கிறேன். இசை மொழிக்கு அழகு தருகிறது, மொழி இசைக்கு ஆயுள் தருகிறது. ஐந்து பாடல்களுக்கும் ஐம்பூதங்களை உள்ளடக்கமாக்கியவர் இயக்குனர் வசந்த்; சிறந்த இசையை வழங்கியவர் ஏ.ஆர்.ரகுமான்.
‘நதியே நதியே’ பாடலில் ‘தண்ணீர்க் குடத்தில் பிறக்கிறோம், தண்ணீர்க் கரையில் முடிக்கிறோம்’ என்ற வரிகளை தமிழன்பர்கள் இன்றும் மந்திரம்போல் ஓதுகிறார்கள்.
அதேபோல், ‘காற்றே என் வாசல் வந்தாய்’ பாடலில் ‘பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க; பூமிக்குமேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க’ என்ற வரிகளை இன்றைய இருபது வயது இளைஞர்கள் கூட இதழோடு இதழ் சேர்த்துப் பாடுகின்றனர்.
நல்ல பாடல்கள் தேன்போல் அழியாதவை. படம் மறந்தாலும் பாடல்கள் மறக்கப்படமாட்டாது. காடுகள் அழிந்தாலும் விதைகள் அழியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.