மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் ஜீத்து ஜோசப். தமிழில் கமல்ஹாசன் நடித்த பாபநாசம் திரைப்படத்தையும், கார்த்தி நடித்த தம்பி திரைப்படத்தையும் இயக்கியவர். தற்போது மிராஜ் படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற லோகா திரைப்படம் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

அவர் கூறுகையில், “ஒரு தொழில்துறையில் பல்வேறு வகையான திரைப்படங்கள் இருக்க வேண்டும். பொதுவாக நடைபெறும் விஷயம் என்னவென்றால், ஒரு வகையான திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டால், அனைவரும் அதே வகை திரைப்படங்களை உருவாக்கத் தொடங்கி விடுகிறார்கள். லோகா படத்தின் வெற்றியால் இப்போது எல்லோரும் சூப்பர்ஹீரோ படங்களை உருவாக்க ஆரம்பிக்கக்கூடும் என்ற அபாயம் உள்ளது. அது முற்றிலும் சரியான நிலைமையல்ல.
தற்போது லோகா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதால், மற்ற வகையான கதைகளை ஆராய்ந்து, அவற்றையும் வெற்றிகரமாக்குவது ஒரு சவாலாக இருக்கும். நான் எல்லாத் தரப்பட்ட கதைகளிலும் வேலை செய்ய விரும்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.