சென்னையில் நடைபெற்ற இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் தனுஷ் படத்திற்கு இட்லி கடை டைட்டில் வைக்க காரணம் என்ன என்பதை பகிர்ந்துள்ளார்.

அதில், எங்கள் பாட்டி ஊரில் ஒரு இட்லி கடை இருந்தது. தினமும் அங்கே சாப்பிட வேண்டும் என்பதே என் ஆசை. ஆனால் கையில் காசு இருக்காது. காலை வயலில் பூ பறிக்கச் செல்வோம். இரண்டு மணி நேரம் பறித்தால் ஆளுக்கு இரண்டு ரூபாய் கிடைக்கும். அதை எடுத்து, ஒரு தோட்டத்தில் குளித்து விட்டு, அந்த இட்லி கடையில் சென்று நான்கு இட்லி வாங்கி சாப்பிடுவோம்.அப்படி உழைத்து சாப்பிடும் சுவையும் சந்தோஷமும், பெரிய ஹோட்டல்களில் கூட கிடைக்காது. அதனால்தான் இட்லி கடை என்ற படத்தை எடுக்க வேண்டும் என்று தோன்றியது. இதில் என் சிறுவயதில் மனதை பாதித்த உண்மை கதாபாத்திரங்களும், பின்னர் சென்னையில் சந்தித்த சில அனுபவங்களும் அடிப்படையாக உள்ளன.
மேலும், எல்லோரும் நெகட்டிவிட்டி பரப்புவதில்லை. சிலர் பல ஐடிகளை வைத்து அதைப் பரப்புகிறார்கள். ஆனால் நம்முடைய தெளிவான பாதையே முக்கியம். நல்ல படங்களை மக்கள் கண்டிப்பாக பார்ப்பார்கள். நெகட்டிவிட்டி பரப்புபவர்களும் கூட அதை பார்த்துவிடுவார்கள். அதனால் கவலைப்பட தேவையில்லை. எண்ணம் போல் வாழ்க்கை என்றுள்ளார் .