நடிகர் கவின், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் வெளியான ‘லிப்ட்’, ‘டாடா’ போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. கடைசியாக கவின் நடித்திருந்த ‘பிளடி பெக்கர்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே சந்தித்தது.

இதற்கிடையில் கவின் ‘கிஸ்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரபல நடன இயக்குனர் சதீஷ் இயக்கிய இந்தப் படத்தில், கவினுக்கு ஜோடியாக ‘அயோத்தி’ திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படம் வரும் 19 ஆம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி வைரலாக பரவியுள்ளன. இந்நிலையில், படத்தின் வெளியீடு நெருங்கியுள்ளதால், தணிக்கை வாரியம் ‘கிஸ்’ படத்திற்கு “யு/ஏ” சான்றிதழை வழங்கியுள்ளது.