பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்த கும்கி படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் ஒளிப்பதிவு செய்த சுகுமாரும் சிறந்த வரவேற்பைப் பெற்றார். அதன் பிறகு பல பெரிய படங்களிலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

தற்போது பிரபு சாலமன் – சுகுமார் கூட்டணி மீண்டும் கும்கி 2 படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படம் முழுவதும் காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி சுகுமார், “கும்கியை விட கும்கி 2 குழந்தைகளையும் ஈர்க்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டும் வெவ்வேறு பின்னணி கொண்ட கதைகள். யானை மட்டுமே இரண்டு படங்களுக்கும் பொதுவான இணைப்பு. இந்திய சினிமாவில் யாரும் எட்டாத வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. முக்கால்வாசி கதை வனப்பகுதியிலேயே அமைந்திருப்பதால் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவம் கிடைக்கும். பிரபு சாலமனின் முழு உழைப்பால் இது சாத்தியமானது.
அதே சமயம் விஎப்எக்ஸ் பணிகளும் சிறப்பாக வந்துள்ளன,” என்றார். கும்கி 2க்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். கதாநாயகனாக மதியழகன் அறிமுகமாக, வில்லனாக ஹரிஷ் பெராடி அறிமுகமாகிறார். ஜெயந்திலால் காடா தயாரிக்க, படத்தின் மோஷன் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.