நடிகை அனுஷ்கா நடித்த திரைப்படம் வெளியாகி நீண்ட இடைவெளி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், தெலுங்கில் இயக்குநர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடித்த ‘காட்டி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதில் நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். இதனுடன் தொடர்புடையதாக நடிகர் ராணா மற்றும் அனுஷ்கா இடையே நடந்த சினிமா குறித்த உரையாடலின் ஆடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் ராணா, அனுஷ்காவிடம், “‘அருந்ததி’, ‘பாகுபலி’, இப்போது ‘காட்டி’ போன்ற படங்களில் நாயகியாக நடிக்க எப்போதுமே உங்களைத் தான் முதல் தேர்வாகக் கருதுகிறார்கள். இது எப்படி சாத்தியமாகிறது?” என்று கேட்டார். அதற்கு அனுஷ்கா, “எனக்கே தெரியவில்லை. நானும் இதைப் பற்றி அடிக்கடி யோசிப்பேன், ஏன் இப்படி நடக்கிறது என்று,” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். மேலும், ‘காட்டி’ பட இயக்குநர் கிரிஷிடம் பேசும் போதும், “ஆண்களில் அடிதடி ஹீரோ மாதிரி நானும் ஒரு அடிதடி பெண்ணாக இருக்க முடியுமா?” என்று கேட்டதாகவும் கூறினார்.
அதற்கு உடனே ராணா, “இப்படிப்பட்ட கதைகளில் உங்களைத் தவிர வேறு யாரையும் தேர்வு செய்ய முடியாது,” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார். மேலும், இயக்குநர் கிரிஷ் பற்றி அனுஷ்கா, “அவரால் மட்டுமே இப்படிப்பட்ட தனித்துவமான கதாபாத்திரங்களை உருவாக்க முடியும். ‘வேதம்’ படத்தில் அவர் கொடுத்த சரோஜா என்ற கதாபாத்திரம், எனது சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாகும்,” என்று கூறியுள்ளார்.