அஜய்தீஷன் நடிக்கும் ‘பூக்கி’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் பாண்டியராஜன். அதைப் பற்றி அவர் கூறுகையில், ‘இந்த படத்தில் நடித்தபோது முழு சம்பளமும் ஒரே முறையில் கிடைத்தது. இளைஞர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. நான் படம் இயக்கப்போகிறேன் என்று என் குருநாதரான கே. பாக்யராஜிடம் சொன்ன அந்த நினைவுகள் இப்போது மீண்டும் நினைவுக்கு வருகிறது. ஒரு நள்ளிரவு நேரத்தில் அவரிடம் இதைச் சொல்லி, அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றேன். அப்போது அவர், ‘படத்தை டைரக்ட் பண்ணு, ஆனால் டைரக்டரான மாதிரி வெளியில் நடிக்காதே’ என்று எனக்கு அறிவுரை கூறினார்.

சில இயக்குநர்கள் தங்களை இயக்குநராக காட்டிக் கொள்ளும் நோக்கத்தில் செட்டில் தேவையற்ற சத்தமிட்டு பந்தா காட்டுவார்கள். கடுமையாக வேலை செய்கிறோம் என்கிற போலி தோற்றம் உருவாக்குவார்கள். ஆனால் அவை தேவையற்றவை. காட்சியில் என்ன வருகிறது என்பதைப் பெறுவதற்காக உழைக்க வேண்டியது தான் இயக்குநரின் பொறுப்பு. வெளியில் இயக்குநராக பாசாங்கு செய்வதற்கெல்லாம் அவசியமில்லை. இப்போது உள்ள இயக்குநர்கள் திட்டமிட்ட முறையில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்’’ என்றார்.
இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்த சுந்தரா டிராவல்ஸ் ராதா கூறுகையில், ‘‘என்னுடைய சிறுவயதில் பாண்டியராஜ் சார்-ஐ நேரில் பார்த்தது நினைவுக்கு வருகிறது. அப்போது அவர் என்னை வைத்து டெஸ்ட் ஷூட் எடுத்தார். கேமரா, குடைகள் என அனைத்தும் அமைத்து என்னைப் படம் எடுத்தார்கள். அந்த அனுபவம் இன்னும் நினைவில் உள்ளது. அப்போது அவர் என்னை ஆசீர்வதித்து அனுப்பினார். பல ஆண்டுகள் கழித்து அவர் நடிக்கும் படத்தில் நானும் இணைந்து இருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.