2022 ஆம் ஆண்டு செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்துத் திரைக்கு வந்த ’கட்டா குஸ்தி’ படம் வெற்றி பெற்றது. கடந்த சில மாதங்களாகவே இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளை செல்லா அய்யாவு முன்னெடுத்து வந்தார். தற்போது ’கட்டா குஸ்தி 2’யை வேல்ஸ் நிறுவனம் மற்றும் விஷ்ணு விஷாலின் சொந்த நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

முதல் பாகத்தில் நடித்த நாயக, நாயகி விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் கதாநாயக, கதாநாயகியாக நடிக்கின்றனர். அதோடு, முதல் பாகத்தில் நடித்த கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ் ஆகியோரும் தொடர்கிறார்கள். இவர்களுடன் நடிகர் கருணாகரன் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைகிறார்.
முந்தைய பாகத்தின் கதை முடிந்திருந்தாலும், அதன் தொடர்ச்சியாக இந்த படம் ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில் உருவாகிறது. இதில் குடும்பங்களில் காணப்படும் முக்கிய பிரச்சினைகளை நகைச்சுவைத் தன்மையில் பதிவு செய்து, அனைவரும் ரசிக்கும் வகையில் வணிகரீதியான பொழுதுபோக்கு படமாக உருவாக்கப்படுகிறது. ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். சென்னையிலும், அம்பாசமுத்திரம், பொள்ளாச்சி, பாலக்காடு பகுதிகளிலும் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.