போலீஸ் உதவி ஆணையர் மதுசூதனன் ராவ் அவர்களின் மகள் சேஷ்விதா கனிமொழி ஒருநாள் இரவில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைக்கிறது. அந்த வழக்கில் உணவு டெலிவரி பையனாக இருக்கும் ஹீரோ தருண் விஜய் மீது போலீசார் சந்தேகிக்கிறார்கள். விசாரணை நடைபெறும் நிலையில், இறுதியில் ஆட்டோ டிரைவரான ராம்ஸ்தான் கொலையாளி என்று முடிவு செய்து, ஹீரோவை அப்பாவி என நினைத்து விடுவிக்கிறார்கள். சில நாட்களுக்கு பிறகு, “அந்தக் கொலையை நான்தான் செய்தேன், மேலும் இரண்டு கொலைகளையும் செய்துள்ளேன்” என்று போலீசில் சரணடைகிறார் ஹீரோ. அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல போலீசார் நினைக்கும்போது, சேஷ்விதா உயிருடன் மீட்கப்படுகிறார். உண்மையில் என்ன நடந்தது? ஹீரோ நல்லவரா? கெட்டவரா? என்ற கேள்விகளுடன் நகரும் குற்றத் திரில்லர் திரைப்படம் குற்றம் புதிது.

கதை, ஒருநாள் இரவில் வீட்டுக்கு திரும்பும் வழியில் சேஷ்விதா காணாமல் போவதிலிருந்து தொடங்குகிறது. மகளை இழந்த கவலையில் தவிக்கும் அப்பா மதுசூதனன் ராவ், தனது போலீஸ் குழுவினரை வைத்து விசாரணையைத் தொடங்குகிறார். இதன் மூலம் கதை விரிகிறது. கோலிசோடா உட்பட பல படங்களில் வில்லனாக நடித்த மதுசூதனன் ராவ், இத்திரைப்படத்தில் பாசமிக்க அப்பாவாகவும், மகள் கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க போராடும் அதிகாரியாகவும் சிறப்பாக நடித்துள்ளார். மகளாக நடித்த சேஷ்விதா, தனது உடல் மொழியும், நடிப்புத் திறமையும் மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளார். மார்கன், பரமசிவன் பாத்திமா படங்களில் நடித்த அவர், இடைவேளைக்கு முன் பாசமான மகளாகவும், கிளைமாக்ஸில் முற்றிலும் வேறுபட்ட பரிமாணத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். அப்பா–மகள் பாடல் காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் அவர் மிகவும் அழகாகத் திகழ்கிறார்.
புதுமுக ஹீரோ தருண் விஜய், தனது அப்பாவித்தனமான முகத்தாலும், பேசும் வசனங்களாலும், மனநிலை பாதிக்கப்பட்டவராக நடித்த விதத்தாலும், கடைசியில் வேறொரு முகத்தை காட்டியதாலும் கதைக்கு வலுவாக உள்ளார். சரணடையும் போது சொல்வதற்கான கொலைக் கதைகள், நீதிமன்றத்தில் பேசும் வசனங்கள், கிளைமாக்ஸ் நடிப்பு ஆகியவை இயக்குனர் அவரை எவ்வாறு சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் என்பதைக் காட்டுகிறது.
வில்லனாக நடிக்கும் நான் மகான் அல்ல படத்தின் ராம்ஸ், மிகக் குறைந்த காட்சிகளில் வந்தாலும், தனது இயல்பான வில்லத்தனத்தில் மிரட்டியுள்ளார். ஹீரோவின் தந்தையாக நடித்த நிழல்கள் ரவி, ஹீரோயின் தாயாக நடித்த பிரியதர்ஷினி ராஜ்குமார் ஆகியோர் பாசத்தில் உருகும் கதாபாத்திரங்களில் வெளிப்பட்டுள்ளனர். மேலும் விசாரணையில் ஈடுபடும் போலீசார், குறிப்பாக பெண் போலீசார், தங்கள் புத்திசாலித்தனத்தால் பாராட்டப்படுகிறார்கள்.
போலீஸ் விசாரணை காட்சிகள், கொலை நடக்கும் அந்தச் சிறிய அறை காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அப்பா–மகள் பாசப்பாடலை இனிமையாக வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் கரண் பி கிருபா. ஒரு கொலை, பின்னர் இரண்டு கொலைகள், அதன் பிறகு வரும் திடீர் திருப்பங்கள் என முதல்பாதி வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்கிறது. ஹீரோவின் கதாபாத்திர வடிவமைப்பும், அவர் காட்டும் செயல்பாடுகளும் படத்தில் எதையோ கூற வருவதாக உணர்த்துகின்றன.
கடைசி அரைமணி நேரத்தில் படத்தின் மொத்த போக்கும் மாறி, பல கேள்விகளுக்கான பதில்களை வெளிப்படுத்துகிறது. இப்படியான திரைக்கதை, திடீர் திருப்பங்கள், நடிகர்களின் ஆற்றல் ஆகியவை இயக்குனரின் திறமையை வெளிப்படுத்துகின்றன. ஆனால், ஒரு வலுவான திரில்லர் படமாக முடிக்க வேண்டிய இடத்தில் கிளைமாக்ஸ் அளவுக்கு மீறாமல் மிதமாக நிறைவு பெறுகிறது.