காரைக்குடியில் வசிக்கும் நிஷாந்த் ரூசோவின் திருமணம் அடிக்கடி தள்ளிப்போய்கொண்டே இருக்கிறது. அவரைப் பார்க்க வரும் பெண்கள் அனைவரும் “அய்யோ இவர்தானா?” என்று அலறி ஓடுகிறார்கள். காரணம் – அவர் வழுக்கைத் தலையன். அதையும் மீறி பக்கத்து வீட்டு பெண்ணுடன் திருமணம் நடக்க இருந்தபோது, ஒரு தவறான வீடியோ காரணமாக அதுவும் நின்றுவிடுகிறது. விரக்தியடைந்த ஹீரோ சென்னை சென்று விக் போட்டு, வழுக்கையை மறைத்து, வர்ஷினி வெங்கட்டை திருமணம் செய்ய முயற்சிக்கிறார். அதற்கும் பல தடைகள். கடைசியில் நிஷாந்துக்கு திருமணம் நடந்ததா இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

ஹீரோவின் “வழுக்கைத் தலையை” மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. ஸ்பெஷல் மேக்கப் மூலம் வழுக்கைத் தலை ஆளாக மாறி நடித்துள்ள நிஷாந்தின் முயற்சியை பாராட்டலாம். , காதல் காட்சிகள், உணர்ச்சிவசமாகும் தருணங்கள், கோபப்படும் சீன்கள் என பல இடங்களில் அவரது நடிப்பு அப் டூ மார்க்.
முதற்பாதியில் ஹீரோயினாக வரும் ஷாலினி சில காட்சிகளில் சிம்பிளாக ரசிக்க வைக்கிறார். பிற்பாதியில் ஹீரோயினாக வரும் வர்ஷினி வெங்கட், ரீல்ஸ் மூட்டையில் சிக்கியவளாக ஓவராக நடித்துவிட்டார். காமெடி என்று வரும் ஹீரோவின் நண்பர்கள், குடும்பத்தினர், ரோபோ சங்கர் – யாரும் சிரிப்பை வரவைக்கவில்லை; மாறாக சோதனை கொடுக்கிறார்கள்.ஹீரோ அம்மா, அப்பா, ஹீரோயினின் பாட்டி – இவர்களின் நடிப்பு பக்கா நாடகத்தனம். பாசம் என்ற பெயரிலஅ பாசம் ஓவராக பொங்குகிறது. வழுக்கையை சரி செய்வதாக வரும் டாக்டர் சம்பந்தப்பட்ட சில சீன்களே ஓரளவு சும்மா “சரி, ஓகே” என்று தோன்றும். அதேபோல், திருமண வீட்டில் வரும் பாடல் மட்டும் செவிக்கு இனிமையாய் இருக்கிறது.
புகைப்படக் கலைஞராக வரும் விஜய் புகழ் கூட ஏதோ டயலாக் பேசி, காமெடி என்ற பெயரில் நேரத்தை வீணடித்துவிடுகிறார். திருமண வீடு காட்சிகளை கலர்புல்லாக எடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ரயீஸ். ஆனால் கதை சொல்லும் முறையில் விறுவிறுப்பு குறைவு. இசையமைப்பாளர் ரஞ்சித் உன்னியின் பாடல்களும், பக்கச் சத்தங்களும் மனதில் பதியவில்லை. திரைக்கதை முற்றிலும் வலுவிழந்திருக்கிறது. பக்கம் பக்கமாக பல கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டே போவதும் சலிப்பை ஏற்படுத்துகிறது.
வழுக்கைத் தலை ஆண்களுக்கு திருமணத்தில் ஏற்படும் சிக்கல்கள், அவர்களின் மனநிலை, அதைத் தாண்டி அவர்கள் செய்யும் முயற்சிகள் – ஒரு நல்ல கரு தான். ஆனால் அந்த கருவை சினிமா திரைக்கதை மாதிரியாக எடுத்து செல்ல முடியாமல் போனது மிகப் பெரிய குறை. ஏராளமான நடிகர்கள் நடித்தாலும், படத்தை சுவாரசியமாக்க இயலவில்லை.சுருக்கமாகச் சொன்னால், “சொட்ட சொட்ட நனையுது – நல்ல கரு, ஆனால் படம் OK ரகம் தான்.