1999-ம் ஆண்டு கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் வெளிவந்தது. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்தார்.

வெளிவந்ததும் படையப்பா திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் அப்போது ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன. வசூலில் சாதனை படைத்த இப்படம் தென்னிந்திய பிலிம் பேர் விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் பெற்றது. இன்னும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் படையப்பா முக்கிய இடம் பிடித்துள்ளது.
இந்த நிலையில், படையப்பா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது என இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் அறிவித்துள்ளார். இந்தச் செய்தி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.