சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகை பிரியாலயா. சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற டிரெண்டிங் படத்தில் அவர், நடிகர் கலையரனுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது அந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பிரியாலயாவுக்கு புதிய சினிமா வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, சிறந்த கலைஞர்களுடன் இணைந்து நடிப்பது என்றென்றும் என் கனவு. சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்தபோது எனக்குக் கிடைக்காத மனநிறைவு, நடிப்பின் மூலம் எனக்குக் கிடைக்கிறது. டிரெண்டிங் படத்தில் நடித்த அனுபவம், அந்த உணர்வை மேலும் வலுப்படுத்தியது. ஒரு கலைஞனுக்கு பணமும், புகழும் முக்கியம் தான். ஆனால் அதைவிட ஒரு வேலையில் கிடைக்கும் மனநிறைவு தான் முதன்மை என நான் நம்புகிறேன்.
பள்ளி, கல்லூரி நாட்களில் நான் சிம்பு ரசிகை. அவரின் படங்களை மிகவும் ஆர்வத்துடன் பார்த்துவந்தேன். இன்றும் அவர் எனக்கு பிடித்த நடிகர் தான். ஆனால் நடிப்பு குறித்து பேசும்போது என்னை ஆச்சரியப்படுத்தும் நடிகர் சியான் விக்ரம். அவர் நடித்த சில படங்கள் வெற்றி பெறவில்லை என்றாலும், அந்த படங்களில் கூட விக்ரமின் நடிப்பு அபூர்வமானதாகவே இருக்கும். எனக்குள் நடிப்பு ஆர்வத்தை அதிகரிக்கச் செய்தவர் விக்ரம்தான்.
ஒரு கதாபாத்திரத்திற்குத் தேவையானதை, ஒரு நடிகையாக நான் முழுமையாகச் செய்ய வேண்டும் என்பதில் உறுதி உள்ளேன். ஆனால் மிகுந்த கவர்ச்சியுள்ள கதாபாத்திரங்களில் நான் நடிக்க விரும்பவில்லை. திறமைக்கு இங்கு முக்கியத்துவம் உண்டு என நம்புகிறேன். கவர்ச்சியே தவறு என்று சொல்லவில்லை. அது நேர்த்தியான அளவில் இருந்தால் போதுமானது என நினைக்கிறேன்.நடனம்தான் எனக்குப் பெரிய உடற்பயிற்சி. என்ன சாப்பிட்டாலும் சரி, அதில் கட்டுப்பாடு அவசியம். ஊர் சுற்றுவது எனக்குப் பெரிய ஆர்வமில்லை. படப்பிடிப்பு இல்லாத நாட்களில், என் சொந்த ஊரில் அப்பாவுடன் நேரம் செலவிடுவதே எனக்கு பிடிக்கும்.” என்று அவர் கூறினார்.