நடிகர் மோகன்லால் நடிப்பில், பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கியுள்ள திரைப்படம் ஹிருதயபூர்வம். இந்த படம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் மோகன்லாலுடன் முக்கிய கதாபாத்திரங்களில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், வளர்ந்து வரும் இளம் நடிகர் சங்கீத் பிரதாப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சங்கீத் பிரதாப், பிரேமலு திரைப்படத்தில் கதாநாயகனின் நண்பனாக நடித்து தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். முன்னதாக மோகன்லாலுடன் வெளிவந்த இன்னொரு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், ஹிருதயபூர்வம் படத்தில் அவர் மோகன்லாலுடன் முழு கதை முழுவதும் இணைந்து செல்லும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

படம் வெளியீடு நெருங்கும் நிலையில், மோகன்லாலுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துகொண்ட சங்கீத் பிரதாப் கூறுகையில், “குமுளியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுகொண்டிருந்தபோது, எனக்கு ஒரு நாள் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது இயக்குனர் சத்யன் அந்திக்காடு, மோகன்லாலுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையிலேயே என்னை ஓய்வெடுக்க ஏற்பாடு செய்தார். அந்த ஊரில் இருந்த மருத்துவர் அழைக்கப்பட்டு வந்து எனக்கு ஊசி போட்டும், மாத்திரைகள் கொடுத்தும் சிகிச்சை அளித்தார்.
அந்த நேரத்தில் அங்கே வந்த மோகன்லால், டாக்டரிடம் என் உடல்நிலை குறித்து அக்கறையுடன் கேட்டறிந்தார். பின்னர் என் அருகில் நின்று, என் தலையை சில நொடிகள் தடவி, “நன்றாக ஓய்வெடு” என்று சொன்னார். அவரது அந்த அன்பான பரிவு கண்டு என் கண்களில் கண்ணீர் வந்தது. அன்றைய தினம் நானும் அவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருந்தாலும், எனக்காகவே மோகன்லால் அன்றைய படப்பிடிப்பை ரத்து செய்து விடுமாறு அறிவித்தார். அதன்பிறகு, எனது உடல்நிலை சீராகிய பின்பு மறுநாள் தான் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. என்னைப் போன்ற வளர்ந்து வரும் சிறிய நடிகருக்காக மோகன்லால் காட்டிய அக்கறையும் மனிதநேயமும் என் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாதது” என்று அவர் பகிர்ந்துள்ளார்.