சமீபத்தில் சிறிய பட்ஜெட்டில் உருவாகும் கன்னட படங்கள் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. அதில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்து வரும் படம் சூ ப்ரம் சோ. சுமார் 6 கோடி ரூபாய் செலவில் தயாரான இப்படம், 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

கன்னட நடிகரும் இயக்குநருமான ராஜ் பி. ஷெட்டி, ஷனீல் கவுதம், சந்தியா, பிரகாஷ் துமினாட் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜே.பி. துமினாடு இப்படத்தை இயக்கியுள்ளார். ஒரு கிராமத்தில் நிகழும் அமானுஷ்ய சம்பவங்களை மையமாகக் கொண்டு நகைச்சுவை கலந்த படமாக இப்படம் உருவாகியுள்ளது.
மேலும் இப்படம் தமிழிலும் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல விநியோகஸ்தர் என்.எஸ் ராஜ்குமார் இதன் தமிழ் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார் எனப்படுகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இப்படத்தின் இயக்குனர் ஜே.பி.துமினாடு தமிழ் ரீமேக்கையும் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.