2014 ஆம் ஆண்டு நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியான ‘ஓம் சாந்தி ஓசானா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஜூட் ஆண்டனி ஜோசப். பின்னர் இரண்டு படங்களை இயக்கிய இவர், முழுநேர நடிகராகவும் மாறினார். இப்படியான சூழ்நிலையில், 2023 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான ‘2018’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட சேதங்களை மையமாகக் கொண்டு, உண்மைக்கு நெருக்கமான விதத்தில் அந்தப் படத்தை இயக்கியிருந்தார் ஜூட் ஆண்டனி ஜோசப். தற்போது இதே போன்று மற்றொரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
1979 ஆம் ஆண்டு, கோவாவில் இருந்து ஜெர்மனிக்குச் சரக்குகளை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் திடீரென 51 பணியாளர்களுடன் மாயமாகியது. அதன்பின் அந்த கப்பல் குறித்த மர்மம் இன்னும் தீர்க்கப்படவில்லை. அந்தக் கப்பலில் பயணித்த கேரளாவைச் சேர்ந்த கப்பல் கேப்டன் மரியதாஸ் ஜோசப்பின் மகனான தாமஸ் ஜோசப், அந்த நிகழ்வின் பின்னணி குறித்த ஆய்வுகளைச் செய்து, அதை ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தை இயக்கத் தயாராகியுள்ளார் ஜூட் ஆண்டனி ஜோசப். இந்தக் கதை வடிவமைப்பில் அவருடன் அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் ரைட் மற்றும் பத்திரிகையாளர் ஜோஷி ஜோசப் ஆகியோரும் இணைந்துள்ளனர்.