துஷார் ஜலோடா இயக்கத்தில் சித்தார்த் மல்கோத்ரா மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ள ‛பரம் சுந்தரி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ஜான்வி கபூர் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில் ஜான்வி கபூரின் மலையாள உச்சரிப்பு குறித்து நடிகை பவித்ரா மேனன் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “ஜான்வி கபூர் பேசும் மலையாள உச்சரிப்பில் பிழை இருக்கிறது. மலையாள நடிகைகள் நடிக்க வைப்பதில் உங்களுக்கு என்ன தடைகள் இருக்கின்றன? நாங்கள் திறமை குறைந்தவர்களா?

கேரளாவில் எந்த பெண்ணும் இப்படிப் பேசமாட்டார். நான் மலையாள நடிகை என்றாலும் இந்தி மொழியை சுலபமாகப் பேச முடியும். இப்படிப்பட்ட கதாபாத்திரத்திற்காக மலையாளத்தைச் சேர்ந்த ஒரு நடிகையைத் தேடுவது இத்தனை சிரமமா? மலையாள நடிகைகளை தவறாக காட்டுவதே பாலிவுட் சினிமாவின் வேலை போலி ஆகிவிட்டது.
நாங்கள் சாதாரணமானவர்கள் என்றாலும் திறமைசாலிகள். எங்குச் சென்றாலும் மல்லிகைப்பூ அணிந்து, மோகினி ஆட்டம் ஆடும் பெண்களாகவே நாங்கள் இருப்பதில்லை. ஸ்ரீதேவியின் மகள் என்பதால் ஜான்வி கபூருக்கு எல்லாம் செய்ய சுதந்திரம் இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு எதிராக ஜான்வி கபூர் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.