மறைந்த நடிகர் விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன் ஆகஸ்ட் 22-ஆம் தேதி மீண்டும் வெளியிடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நேற்று சென்னை கமலா திரையரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட இயக்குநர் மற்றும் நடிகர் சிங்கம்புலி, விஜயகாந்தைச் சார்ந்த நினைவுகளை பகிர்ந்தார். அவர் கூறுகையில், “ஒருமுறை விஜயகாந்த் சார் உடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று பிரசாத் ஸ்டூடியோவுக்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்றனர். அந்த வரிசையை நானே ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். அப்போது சார் என்னைப் பார்த்து, ‘வா… நீ போட்டோ எடுக்கலையா?’ என்று கேட்டார். ‘நான் உங்களை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும்’ என்று சொன்னேன். அவர் ‘நினைச்சேன்டா… மதுரைக்காரனாலே இப்படித்தான்’ என்று சிரித்துவிட்டு சென்றார்.

பிறகு, நான் அஜித் நடித்த படத்தை எடுத்து கொண்டிருந்தேன். உளவுத்துறை வெளியானது. அதே சமயம், விஜயகாந்த் சார் உடன் ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. சூர்யா நடித்த படத்தில் யாராவது ஒரு நாள் கெஸ்ட் ரோல் செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் விஜயகாந்த் சார் பெயரைச் சொன்னேன். ‘அவர் எப்படி ஒரு நாள் வருவார்?’ என்று கேட்டார்கள். நான் ‘பேசிப் பார்ப்போம்’ என்றேன்.
பேசிப் பார்த்ததில் அவர் சம்மதித்தார். பின்னர், நான் அவர் வீட்டுக்குச் சென்றபோது, ‘இன்னும் 10 நிமிடம் கழித்து வா… ஒரு நாள் ஷூட்டிற்காக ஒரு டைரக்டர் கதை சொல்ல வருகிறார்’ என்றார். அது நான்தான் என்று சொன்னேன். உடனே அவர், ‘ஒரு நாளுக்கு நடிக்க மாட்டேன்’ என்றார். நான், ‘நீங்கள் நடிக்கவில்லை என்றால், படம் எப்படிப் போகும்?’ என்று கேட்டேன். பத்து நாட்களுக்கு பிறகு தேதியை அளித்தார்.‘தேவையில்லாமல் ஏன் பணத்தை வீணடிக்கிறீர்கள்!’ என்று சொல்லி, அவர் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இருந்த நடிகர்களைவே பயன்படுத்தச் சொன்னார். ஆனால், நான் முழு யூனிட்டையும் அழைத்து சென்றிருந்தேன். ‘உன்னை யார் யூனிட்டுடன் வரச் சொன்னது?’ என்று கேட்டார். ‘படம் எடுக்கணுமே சார்’ என்றேன். அவர், ‘தேவையில்லாமல் ஏன் காசு செலவு செய்கிறீர்கள்? இங்கேயே ஆளுகள் இருக்கிறார்கள். நீ, சூர்யா, ரத்னவேல் மட்டும் வாங்க’ என்று கூறினார்.
அவரது ஷூட்டிங்கை மூன்று மணிநேரம் நிறுத்திவிட்டார். ஒரு மணிநேரம் கேப்டன் ஷூட்டிங்கின் செலவை யோசித்துப் பாருங்கள். நானும் சூர்யாவும் அவருக்கு மாலை அணிவித்தோம். ‘எதற்கு இதெல்லாம்… தேவையில்லாத செலவு’ என்று கேட்டார். அவ்வளவு எளிமையான, நல்ல மனம் கொண்டவர் அவர். பின்னர், விஜய பிரபாகரனின் தம்பி சண்முகபாண்டியன் நடித்த படத்தில், நான் காசு கேட்டதாக ஒரு வதந்தி பரவியது. அதை நான் ‘இல்லை’ என்று விளக்கியவுடன், அவர் என்னை மலேசியா வரச் சொன்னார். அங்கே நான்கு நாள் ஷூட்டிங்கிற்காக சென்ற நான், 16 நாட்கள் அவருடன் இருந்தேன். மக்களுக்கு அண்ணனின் உண்மையான தன்மை தெரியவில்லை. அவரை தோல்விகள் வீழ்த்தவில்லை, துரோகம் தான் வீழ்த்தியது என்றார்.