பான் இந்தியா மொழிகளில் ‘கேஜிஎப்’, ‘காந்தாரா’ போன்ற படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ், கன்னட திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது. குறைந்த செலவில் பெரும் விஷயங்களை செய்தடையும் இந்நிறுவனம், தற்போதைய தயாரிப்பான ‘மகாவதாரம் நரசிம்மா’ திரைப்படத்தை புராண அடிப்படையில் உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தில் இரண்ய கசிபு எனும் அரக்கன், அவனது மகன் பிரகலாதன் மற்றும் விஷ்ணுவை மையமாக கொண்ட கதையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அனிமேஷன் வடிவில் உருவாக்கப்பட்ட இப்படத்தை அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். இசையமைப்பாளராக சாம் சி.எஸ் பணியாற்றியுள்ளார்.

இந்தப் படத்தில் காணப்படும் அனிமேஷன் காட்சிகள், உலகத் தரத்தில் உள்ளதாக சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். ஹொம்பாலே பிலிம்ஸ் மற்றும் கிளீம் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்’ என்ற பெயரில் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் விவரிக்கும் படங்களின் தொடரை உருவாக்க உள்ளன. அதற்கமைய, ‘மகாவதார் பரசுராம்’ (2027), ‘மகாவதார் ரகுநந்தன்’ (2029), ‘மகாவதார் துவாரகாதீஷ்’ (2031), ‘மகாவதார் கோகுல நந்தா’ (2033), ‘மகாவதார் கல்கி – பாகம் 1’ (2035), ‘மகாவதார் கல்கி – பாகம் 2’ (2037) எனப் படங்கள் வெளியிடப்படும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘மகாவதாரம் நரசிம்மா’ திரைப்படம் 10 நாட்களில் ரூ.105 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதே மாதிரியான திரைப்படங்களை தொடர்ந்து உருவாக்க ஹொம்பாலே பிலிம்ஸ் திட்டமிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.