கூலி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மோனிகா’ பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக இந்த பாடலில் நடித்துள்ள சவுபின் சாகிரின் நடனம் அனைவரிடமும் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. இப்பாடல் உருவான விதம் குறித்தும், அதை திரைக்கதையில் சேர்த்த காரணம் குறித்தும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அவர் அந்த பேட்டியில் கூறியதாவது: “மோனிகா பாடலை நாம் வணிக ரீதியாக யோசித்துப் சேர்த்தோம். என் முந்தைய படங்களில் அப்படியான பாடல்கள் இடம்பெறவில்லை. ஆனால் இந்த படம் முழுவதும் ஒரு த்ரில்லர் பாணியில் நகரும் போது, கதைக்கு ஒரு ரிலாக்ஸிங் பாகம் தேவைப்பட்டது. படமாக பார்த்தால் அந்த பாடல் தொந்தரவு செய்யாமல் கதையின் ஓட்டத்தோடு இணைந்து நகரும். அந்த பாடலில் ரஜினி சார் வர முடியாது, ஏனெனில் கதையிலே அது பொருந்தாது.
அந்த இடத்தில் அந்த பாடலை சேர்க்க காரணமானவர் சவுபின் சாகிர். ‘பீஸ்ம பரவம்’ என்ற திரைப்படத்தில் அவருடைய நடனத்தை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த கதையில் அவருடைய பாத்திரம் அப்படிப் பாட்டுக்கு நடனம் ஆடினால் எப்படி இருக்கும் என்பதைக் கணித்துப் பாடல் சேர்க்கப்பட்டது. ‘கூலி’யில் பல நட்சத்திரங்கள் உள்ள நிலையில், தயாரிப்பு நிறுவனத்துக்கு விளம்பரத்திற்காக ஏதாவது அம்சம் தேவைப்பட்டதால் அந்த வாய்ப்பாக இந்தப் பாடலை இணைத்தோம். என்னால் சண்டைக் காட்சிகளை அந்த இடத்தில் சேர்க்க முடியாது என்பதால், அந்தப் பாடலே அதற்கு பதிலாக பயன்படுத்தப்பட்டது,” என கூறினார் லோகேஷ் கனகராஜ்.