லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இந்தப் படத்தில் அமீர் கான், நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சவுபின் ஷாயிர், உபேந்திரா ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையை அனிருத் அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இப்படத்தின் டிரைலரும் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக இருக்கிறது.

வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கூலி’ படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. இந்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தில் சண்டைக் காட்சிகள் அதிகமாக இருப்பதால், தணிக்கை குழு இந்த சான்றிதழை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் திரைக்கதை குறித்து இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், இந்தியாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். அவரின் கதையில் ரஜினி நடித்தால் எப்படி இருக்கும் என்பதைக் காண இந்த படம் ஒரு அருமையான வாய்ப்பு. இப்படத்துக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. பல பிரபல நட்சத்திரங்கள் இதில் இணைந்துள்ளனர். இப்படிப்பட்ட கூட்டணியை வேறு எந்த படத்திலும் காண முடியாது. ‘கூலி’ என்பது ஒரு புத்திசாலித்தனமான திரைப்படம். இதில் திரைக்கதை மிக அழகாக அமைந்துள்ளது,” என தெரிவித்துள்ளார்.