‘பசங்க’, ‘காக்கா முட்டை’, ‘சாட் பூட் த்ரி’, ‘பூவரசம் பூ பீபீ’, ‘குரங்கு பெடல்’ போன்ற திரைப்படங்களின் தொடர்ச்சியாக தற்போது உருவாகியுள்ள படம் ‘பிஎம்டபிள்யூ 1991’. இது கிரீன்விஸ் சினிமா சார்பில் வில்வங்கா தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘பையா’, ‘கருங்காலி’, ‘வி3’ உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்த பொன்முடி திருமலைசாமி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அவருடன் ‘வட சென்னை’ படத்தில் தனுஷுக்கு அம்மாவாக நடித்த மணிமேகலை மற்றும் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாக மதுரையை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் கவுதம் நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் சாப்ளின் பாலு நடித்துள்ளார்.

இந்த படம் இதுவரை பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 22 விருதுகளை வென்றுள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் பொன்முடி திருமலைசாமி பேசும்போது, “இதற்கு முன்பு நான் இயக்கிய ‘சோம பான ரூப சுந்தரம்’ படத்தில் விஷ்ணு பிரியன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்தனர். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தை தொடர்ந்து எடுக்க முடியாமல் பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டேன். அந்த கோபத்தில்தான் கதாநாயகன், நாயகி இல்லாமல் ஒரு படத்தை எடுக்கலாம் என முடிவெடுத்தேன். உண்மையில் இது சாத்தியமா என்று எண்ணிய நேரத்தில்தான் இந்தக் கதை கிடைத்தது. இந்த படத்தில் ஒரு சைக்கிள் முக்கிய பங்கு வகிக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பொதுவான ஒரு விஷயம் சைக்கிள் தான். ஒரு காலகட்டத்தில் சைக்கிள் வைத்திருப்பதே மிகப் பெரிய மதிப்பாகவும், பெருமையாகவும் கருதப்பட்டது. உண்மையிலேயே பலர் அதை ஒரு காருக்கு நிகராகவே நினைத்தனர். இதை மையமாகக் கொண்டு தான் இந்தக் கதையை உருவாக்கினேன். இதில் முக்கியமான கதாப்பாத்திரமாக மதுரையைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் கவுதம் நடித்துள்ளார். விருதுக்கான படமென்றாலும், இதில் மூன்று பாடல்களும், ஒரு சண்டைக்காட்சியும் இடம் பெற்றுள்ளன. இரண்டு மணி நேர ஓட்ட நேரத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார்.