பிரபல அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளரை கொலை செய்ததால் சென்னை புழல் ஜெயிலில் இருக்கிறார் ரவுடி உதயா. அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்த, சென்னையில் இருந்து அழைத்து செல்கிறது கான்ஸ்டபிள் அஜ்மல்லை உள்ளிடக்கிய போலீஸ் டீம். அந்த பயணத்தில் உதயாவை கொல்ல ஒரு டீம் துரத்துகிறது. அவர்களிடம் இருந்து உதயாவை போலீஸ் அஜ்மல் காப்பாற்றினாரா? உதயாவுக்கும் அந்த கொலைக்கும் என்ன தொடர்பு. அவரை கொல்ல துடிப்பது யார். இந்த சண்டையின் முடிவு என்ன என்பது அக்யூஸ்ட் படத்தின் கதை. பல படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றிய, கன்னடத்தில் சில படங்களை இயக்கிய பிரபுஸ்ரீவாஸ் இயக்கி உள்ளார்.

சென்னை புழல் ஜெயிலில் இருந்து உதயாவை சேலத்துக்கு போலீஸ் டீம் அழைத்து செல்வதில் கதை தொடங்குகிறது. சேலம் கோர்ட்டில் கதை முடிகிறது. இடைப்பட்ட பயணத்தில் உதயாவின் குணம், அவர் காதல், துரோகம், சண்டை, அஜ்மல் கடமையுணர்வு, உதயாவால் கொல்லப்பட்ட மாவட்ட செயலாளர் குடும்பம், அவர்கள் கோபம், அந்த கொலைக்கான பேக்ரவுண்ட், உதயா காதலியின் பின்னணி என பல விஷயங்களை சொல்கிறார் இயக்குனர். இதில் சின்ன சின்ன சுவாரஸ்யங்கள், சில திருப்பங்கள், ஆடல், பாடல், காமெடி கலந்து கலவையாக கதையை கொண்டு செல்ல முயற்சித்து இருக்கிறார்கள்.
கதைநாயகனாக நடித்து இருக்கிறார் உதயா. அவரின் அந்த ரவுடி கெட்அப், அந்த உடல் மொழி, அப்பாவிதனமான காதல், துரோகத்தால் பாதிக்கப்பட்டு கலங்குவதெல்லாம் ஓகே. ஒரு பாடல்காட்சியில் ஹீரோயினுடன் செம குத்தாட்டம் போடுகிறார். கிளைமாக்சில் உருகுகிறார். சில இடங்களில் ஓவர் ஆக்டிங். இன்னொரு ஹீரோவான அஜ்மல்லுக்கு நல்ல போலீஸ் வேடம். ஆகவே அதிகம் நடிக்க வாய்ப்பு இல்லை. ஆனாலும், கைதி உதயாவை கஷ்டப்பட்டு சண்டை போட்டு காப்பாற்றுகிற சீன்கள் ஓகே. இன்னும் டப்பிங்கில் கவனம் செலுத்தி இருக்கலாம். இவர்கள் இருவரும் துரத்தப்படும்போது தங்கும் லாட்ஜ் ஓனராக வருகிறார் யோகிபாபு. பெரிதாக காமெடி வொர்க் அவுட் ஆகாவிட்டாலும், அந்த காட்சிகள் கொஞ்சம் ஆறுதல்.
பூக்காரியாக வரும் ஹீரோயினிடம் அழகு, கவர்ச்சி, நடிப்பு எல்லாம் இருக்கிறது. முதற்பாதியில் காதலில் உருகி, குத்தாட்டம் போடுபவர், பிற்பாதியில் இன்னொரு மாறுபட்ட நடிப்பை தந்து இருக்கிறார். உதயா அக்காவாக வரும் தீபா பாஸ்கரும், ஹீரோயின் கணவராக வரும் தயாவும் கொஞ்சம் நடித்து இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான வில்லன்கள் இதிலும் இருக்கிறார்கள்.
காரில் கூட்டமாக துரத்துகிறார்கள், சண்டை போடுகிறார்கள், அடிவாங்கி, ரத்தம் சிந்தி விழுகிறார்கள். மாவட்ட செயலாளர் மனைவி, மகன் கேரக்டரில் மட்டும் கடைசியில் கொஞ்சம் சில டுவிஸ்ட். அது எதிர்பாராதது. மீசைக்கார போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பவருக்கு ஏன் இவ்வளவு சீன் என்று கேட்கலாம். அவர்தான் படத்தின் இயக்குனர். அதனால், அவரே நடித்து தள்ளிவிட்டார்.
உதயாவை ஆஜர்படுத்த அழைத்து செல்வது, அதில் ஏற்படும் பிரச்னை, உதயாவும், அஜ்மலும் தப்பி செல்வது, உதயா காதல் காட்சிகள் பார்க்கும்படியாக இருக்கிறது. ஒரு நல்ல போலீஸ், ஒரு நல்ல ரவுடி இடையேயான பயணம்தான் அக்யூஸ்ட் கதை.