பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தாய்மொழியில் படம் எடுப்பது என்பது மிகப்பெரிய பலம். ஏனென்றால், நம்மைச் சுற்றி தினமும் நடக்கும் நிகழ்வுகளை நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். அந்த நிகழ்வுகளை காட்சிகளாக படம் எடுக்கும் போது, மக்களிடம் அதிகமான தொடர்பு ஏற்படுகிறது. ஆனால், வேறு மொழியில் படம் எடுக்கும்போது அன்றைய நாளில் என்ன நடக்கிறது, மக்கள் என்ன ரசிக்கிறார்கள் என்பதை நம்மால் உணரமுடியாது. அப்போது வெறும் கதை மற்றும் திரைக்கதை மீதான நம்பிக்கையிலேயே படம் உருவாகிறது. அப்படி பார்த்தால் தமிழ் தான் எனக்கு முழு பலம் தரும். தெலுங்கும் சரிதான், ஏனென்றால் அது நம்முடைய மொழிக்கு அருகில்தான் இருக்கிறது.

ஆனால் ஹிந்தி எனும் மொழி குறித்து எனக்கு எதுவும் தெரியாது. காரணம், நாம் தமிழில் எழுதுவோம், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிறகு ஹிந்தியில் மாற்றி திரையில் காட்சியாக வரும். அந்த மொழியில் அவர்கள் பேசுவதை நாமால் சற்றே யூகிக்க முடியும், ஆனால் அவர்கள் சொல்வதன் உண்மையான உள்ளடக்கத்தை நமக்கு உணர இயலாது. அந்த வகையில், ஒரு மொழி தெரியாத ஊரில் படம் எடுப்பது என்றால், மாற்றுத் திறனாளியாக இருப்பது போல தான் உணரவேண்டும். அதனால், தாய்மொழியில் எடுத்தால் மட்டும் தான் முழுமையான பலத்துடன் படம் இயக்க முடியும்” என தெரிவித்தார்.
இந்த நிலையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 23வது படம் ‘மதராஸி’ உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் மற்றும் டான்சிங் ரோஸ் ஷபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ லட்சுமி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் அனிருத். ‘மதராஸி’ படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் பிரமாண்டமான விளம்பர பணிகள் துவங்கியுள்ளன.