மலையாள திரைப்படத் துறையில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் ஒருவர் நடிகர் ஷேன் நிகம். கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், அவர் படப்பிடிப்புகளின் போது தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் பிரச்சினை ஏற்படுத்துகிறார் என கூறப்பட்டு ரெட் கார்ட் போடப்படுமளவிற்கு ஒரு சூழ்நிலை உருவானது. ஆனால் தற்போது அதுபோன்ற பிரச்சினைகளை தவிர்த்து, தொடர்ந்து படப்பிடிப்புகளில் பங்கேற்று நடித்து வருகிறார்.

அந்த வகையில், தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகும் ‘பல்டி’ என்ற திரைப்படத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில், லிப் லாக் காட்சிகளில் நடிப்பது தொடர்பாக அவர் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.
அதாவது ஒரு கதைக்கு தேவையான விதமாக லிப் லாக் காட்சி இருந்தால், நான் அதை செய்யாமல் இருக்க முடியாது. தேவைப்பட்டால் அந்த காட்சியில் நடித்துவிட்டு சென்று விடுவேன். ஆனால் என் பார்வையில், காதலர்களின் நெருக்கத்தை வெளிப்படுத்துவதற்கு இதைவிட சிறந்த வழிகள் இருப்பதாக நான் நம்புகிறேன். இப்படி நான் சொல்வதை வைத்து, என்னைப் பற்றிப் பழமையான எண்ணங்கள் கொண்டவர் என்று நினைக்கலாம். ஆனால், என் படங்களை என் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்ப்பதற்கு ஏற்றதாக வைத்திருக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.