தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் தெலுங்கு நடிகர்களும் தனித்திறனுடன் தாக்கம் ஏற்படுத்தியுள்ளனர். அந்த வகையில், 1980களின் இறுதியில் நாகார்ஜுனா தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர். 1989 ஆம் ஆண்டு அவர் நடித்த ‘இதயத்தை திருடாதே’ மற்றும் ‘சிவா’ ஆகிய திரைப்படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர்ஹிட் ஆகியன.

பின்னர், 1997-இல் ‘ரட்சகன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நேரடியாக தமிழில் நடித்தார். தொடர்ந்து, 2011-இல் ‘பயணம்’ மற்றும் 2016-இல் ‘தோழா’ ஆகிய இருமொழிப் படங்களில் நடித்தார். சமீபத்தில், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி கடந்த மாதம் வெளியான ‘குபேரா’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது ‘கூலி’ திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்துள்ளார் நாகார்ஜுனா. அவரது திரைப்பயனில் முதல் முறையாக வில்லனாக நடித்திருப்பது இதுவே. அவரை இப்படத்தில் நடிக்க வைப்பதற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவரை ஆறு முறை சந்தித்து கதையை விளக்கியதில்தான் அவர் சம்மதம் தெரிவித்தார். தனது நண்பர்களுடன் சேர்ந்து ‘ரட்சகன்’ படம் வெளியான காலகட்டத்தில் நாகார்ஜுனாவின் ஹேர் ஸ்டைலை பின்பற்றியதுபோல, லோகேஷ் அவரை ரசிகராக இருந்து, இப்போது தன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைத்திருப்பது பெரிய விஷயம் தான்.