டெர்மினேட்டர் மற்றும் டைட்டானிக் போன்ற திரைப்படங்கள் மூலம் ஹாலிவுட்டை மட்டுமன்றி, உலக அளவில் ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். 2009-ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படத்தின் மூலம், அவர் புதிய உலகத்தை உலகின்முன் காட்டி அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தினார்.

வசூலில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு, அவதாரின் தொடர்ச்சிப் பாகங்கள் தயாரிக்கத் தொடங்கப்பட்டன. இதில் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ என்ற இரண்டாம் பாகம் 2022-இல் வெளியாகி, முதல் பாகத்தைப் போல அல்லாதபோதிலும், உலகளவில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பெரிய வெற்றியைப் பெற்றது.
தொடர்ந்து உருவாகி வரும் மூன்றாம் பாகமான ‘அவதார் – தி பைர் அண்ட் ஆஷ்’ படத்தின் இயக்கமும் ஜேம்ஸ் கேமரூனே கவனித்துவருகிறார். இந்தப் படத்தில் முதல் இரண்டு பாகங்களில் நடித்த நடிகர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். அவதார் 3 திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த படத்தின் முதல் டிரைலரை ஜூலை 25ஆம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதே நாளில், ஹாலிவுட் திரைப்படமான ‘தி பென்டாஸ்டிக் 4’ உலகளவில் வெளியாகிறது. அந்த திரைப்படத்தின் இடைவேளையில் ‘அவதார் 3’ படத்தின் டிரைலர் திரையிடப்படும். மேலும், இப்படத்தின் வில்லனாக உள்ள வராங் என்ற கதாபாத்திரத்திற்கான போஸ்டரையும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.