‘கேம் சேஞ்சர்’ படத்துக்குப் பிறகு, புஜ்ஜி பாபு சனா இயக்கும் ‘பெத்தி’ எனும் புதிய திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார் ராம் சரண். இந்தக் கதைக்காக தனது தோற்றத்தை மாற்றும் நோக்கில் அவர் ஒரு தனிப்பட்ட உடற்பயிற்சியாளரை நியமித்துள்ளார். மேலும், ஒரு பக்கா கிராமத்து மனிதர் போல் காட்சியளிக்க, தாடி மற்றும் நீண்ட தலைமுடியை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் அடுத்த கட்டமாக ஆக்ஷன் காட்சிகளை படமாக்கும் வேலைகள் தொடங்க உள்ள நிலையில், தனது உடலமைப்பில் மேலும் மாற்றங்களை கொண்டு வர ராம் சரண் இப்போது தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். இதற்காக அவர் தற்போது ஜிம்மில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அதில், “மாற்றம் ஆரம்பமாகிறது. தூய மன உறுதி, உண்மையான மகிழ்ச்சி” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் பணியாற்றுகிறார். ஒளிப்பதிவாளராக ரத்னவேல் பணியாற்ற, இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் 2026ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.