தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான நாசர், செங்கல்பட்டு நகரைச் சேர்ந்தவர். அங்குள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் இவர் 1975ஆம் ஆண்டில் தனது படிப்பை முடித்தார். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பள்ளி பழைய மாணவர்கள் சந்திப்பு (ரியூனியன்) நடைபெற்றது; ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்ற நடிகர் நாசர், “நான் படித்த பள்ளியில் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, என்னோடு படித்த நண்பர்களை மீண்டும் சந்தித்தேன். என்னை கற்பித்த ஆசிரியர்களையும் பார்த்தேன். வாழ்க்கையில் எளிதில் கிடைக்காத ஒரு நெகிழ்ச்சியான தருணம் இது. இந்த உணர்வு நேற்று இரவிலிருந்தே ஆரம்பித்துவிட்டது. நான் காத்துக்கொண்டிருந்தேன்.
இன்றைய இந்த சந்திப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் உணர்வை வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை. ஐம்பது ஆண்டுகளைக் கடந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு வைபவம் இது,” என்று உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.