மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜோஷி, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் ‘அந்தோணி’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது அவர், நடிகர் உன்னி முகுந்தனை வைத்து ஒரு பான் இந்தியா படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை உன்னி முகுந்தன் பிலிம்ஸ் மற்றும் ஜன்ஸ்டீன் மீடியா இணைந்து தயாரிக்கின்றன.

இதுபற்றி தயாரிப்பு நிறுவனத்தினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேசிய விருது பெற்ற ‘மேப்படியான்’ மற்றும் 100 கோடி ரூபாய் வசூலித்த ‘மார்கோ’ ஆகிய படங்களுக்குப் பிறகு, உன்னி முகுந்தன் பிலிம்ஸ் தற்போது இயக்குநர் ஜோஷியுடன் இணைந்து புதிய படத்தை தொடங்குகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
‘பொரிஞ்சு மரியம் ஜோஷ்’, ‘கிங் ஆப் கோதா’ ஆகிய படங்களுக்கான திரைக்கதையை எழுதிய எழுத்தாளர் மற்றும் இயக்குநர் அபிலாஷ் என். சந்திரன், இந்தப் புதிய படத்தில் இயக்குநர் ஜோஷியுடன் இணைந்து பணியாற்றுகிறார். இதன் மூலம், ஜோஷி இயக்கும் புதிய திரைப்படம் வெறும் ஆக்ஷன் சார்ந்ததல்லாமல், உணர்ச்சிபூர்வமான தருணங்களையும் கொண்டிருக்கும் என்பது உறுதியாகிறது. இந்த படத்தில், ரசிகர்கள் இதுவரை பார்த்திராத வகையில் உன்னி முகுந்தன் புதிய அடையாளத்தில், ஆக்ஷனில் கலக்க உள்ளார் என கூறப்படுகிறது.