இயக்குநர் எஸ். விஜயசேகரனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘போகி’ திரைப்படத்தில் நபி நந்தி, சரத், ‘லப்பர் பந்து’ புகழ் சுவாசிகா, பூனம் கவுர், வேல. ராமமூர்த்தி, சங்கிலி முருகன், மொட்டை ராஜேந்திரன், எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் பற்றி இயக்குநர் கூறும்போது, “6000 அடி உயரத்தில், தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லாத ஒரு மலைப் பகுதியில் வாழும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இன்று வரை சிக்கலான வாழ்க்கையை எதிர்கொண்டு வருகின்றன. அங்கு சைக்கிள் கூட செல்ல முடியாத பாதைகளில் வாழும் மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவம் வெறும் கனவாகவே உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், கதாநாயகன் தனது தங்கையின் வாயிலாக கிராமத்தின் மருத்துவ சேவையை மேம்படுத்த விரும்புகிறான். சில கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளியில் படித்து, வீடு திரும்பும் அந்த தங்கை, மாநிலத்திலேயே முதன்மையான மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர தகுதியைப் பெறுகிறார்.இந்த மலைக் கிராமம், ஒருமித்த கனவுடன் அவளுக்குப் புது பாதையைத் திறக்கின்றது. இறுதியாக, அவர் மருத்துவராக ஆகி தனது கிராம மக்களுக்கு சேவை செய்தாரா என்பதே படத்தின் முக்கியக் கருத்து. இந்தக் கதை ஒரு உண்மைக் கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.