பகத் பாசிலின் எளிமையான வாழ்க்கை முறையைப் பற்றிய தகவலை மலையாள நடிகர் வினய் போர்ட் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருந்தார். அந்த பேட்டியில், பகத் பாசில் எந்தவொரு சமூக ஊடகங்களையோ அல்லது டச் வசதியுள்ள ஸ்மார்ட் மொபைல்களையோ பயன்படுத்துவதில்லை என்றும், இவர் இன்னும் பட்டன் போனையே பயன்படுத்தி வருகிறார் என்றும் தெரிவித்தார். ஆனால், அவர் பயன்படுத்தும் அந்த மொபைல் பற்றிய கூடுதல் விவரங்கள் தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில், தற்போது அவர் பயன்படுத்தும் மொபைல் போனின் விவரம் வெளிவந்துள்ளது. இங்கிலாந்தைத் மையமாக கொண்ட, கையால் வடிவமைக்கப்படும் ஆடம்பர மொபைல்கள் தயாரிக்கும் நிறுவனமான வெர்து (Vertu) என்ற பிரபல நிறுவனத்தின் தயாரிப்பு போனையே பகத் பாசில் பயன்படுத்தி வருகிறார். இந்திய மதிப்பில் அந்த மொபைலின் விலை ரூ.10 லட்சமாகும். பட்டன் வழியாகவே இயக்கக்கூடிய அந்த மொபைல் தற்போது விற்பனைக்கு கிடைக்கவில்லை. மேலும், அதன் உற்பத்தி 17 ஆண்டுகளுக்கு முன்பு, 2008ஆம் ஆண்டு நிறைவு பெற்றுவிட்டது.
இந்த மொபைல் போனில், புளூடூத், ஜி.பி.ஆர்.எஸ்., எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன. டைட்டானியம் என்ற வலிமையான உலோகம் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த போன், நீலக் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதோடு, கையால் தைக்கப்பட்ட உயர்தர தோலாலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அம்சங்களால், இந்த மொபைல் மற்ற சாதாரண மொபைல்களிலிருந்து வேறுபடுகிறது.