விக்னேஷ் நடித்துள்ள “ரெட் பிளவர்” திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சங்க செயலாளர் விஷால் பேசும் போது, “எதிர்காலங்களில் ஒரு புதிய படம் வெளியாகும் போது, முதல் 12 காட்சிகள் அல்லது முதல் மூன்று நாட்களுக்கு, தியேட்டர் வளாகத்திற்குள் ‘பப்ளிக் ரிவியூ’ என்ற பெயரில் யாரும் பேட்டி எடுக்க அனுமதிக்கக்கூடாது எனத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் கோரிக்கை வைக்கிறேன். தேவையானால், தியேட்டருக்கு வெளியே புகைப்படம் எடுக்கட்டும் அல்லது படம் பார்த்தவர்கள் தாங்களாகவே விமர்சனம் செய்யட்டும். சினிமாவை காப்பாற்ற இது கட்டாயமாக செய்ய வேண்டிய முடிவாகும்” எனக் கூறினார்.

அதேபோல் அவர் மேலும் கூறியதாவது, “இன்னும் இரண்டு மாதங்களில் எனது திருமணம் நடைபெறவுள்ளது. அதற்குள் நடிகர் சங்க வளாகம் முழுமையாக தயார் செய்யப்படும். ஆகஸ்ட் 29ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறேன். தற்போது நடிகர் சங்க கட்டடப் பணிகளை முடிக்கத் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன். இந்த படத்தின் ஹீரோ விக்னேஷ் மிகுந்த உழைப்பாளர். அவர் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்” என்றார்.
வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி சாய் தன்ஷிகாவுடன் விஷாலுக்கு திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.