தமிழில் “துப்பாக்கி”, “அஞ்சான்” போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் புகழ்பெற்றவர் பெற்ற பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால், தற்போது “ஸ்ட்ரீட் பைட்டர்” திரைப்படத்தில் தல்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், இந்த படம் வித்யுத் ஜம்வாலின் ஹாலிவுட் அறிமுக படமாக அமையும்.

இந்த திரைப்படம் கேப்காம் நிறுவனத்தின் பிரபலமான வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் பல பிரபல ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கின்றனர். ரியூவாக ஆண்ட்ரூ கோஜி, கென்னாக நோவா சென்டினியோ, எம். பைசனாக டேவிட் டஸ்ட்மால்ச்சியன், கெய்லாக கோடி ரோட்ஸ், பிளாங்காவாக ஜேசன் மோமோவா, பால்ராக்காக கர்டிஸ் “50 சென்ட்” ஜாக்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.
மேலும் வேகா கதாபாத்திரத்தில் ஆர்வில் பெக், டான் ஹிபிகி கதாபாத்திரத்தில் ஆண்ட்ரூ ஷூல்ஸ், அகுமா கதாபாத்திரத்தில் ரோமன் ரெய்ன்ஸ் மற்றும் ஈ ஹோண்டா கதாபாத்திரத்தில் ஹிரூக்கி கோட்டோ ஆகியோரும் உள்ளனர். இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தை கிட்டாவோ சகுராய் இயக்குகிறார். தற்போது வித்யுத் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.