மலையாள சினிமாவில் வெற்றிபெற்ற சில படங்களே இரண்டாம் பாகமாக உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மூன்றாம் பாகமாக வெளியான திரைப்படங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதை ஒட்டி, ‘திரிஷ்யம்’ படத்தைத் தொடர்ந்து, நடிகர் ஜெயசூர்யா நடித்த ‘ஆடு’ திரைப்படமும் இதுவரை இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.

முதல் பாகம் 2015ம் ஆண்டு வெளியாகியிருந்தது. அதன் பின் 2017ல் இரண்டாம் பாகமும் வந்தது. இரண்டும் வெற்றியைப் பெற்ற நிலையில், மூன்றாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு கடந்த சில வருடங்களாகவே ரசிகர்களிடையே நிலவி வந்தது. இந்த எதிர்பார்ப்புக்கு இடையே, இயக்குனர் மிதுன் மானுவேல் தாமஸ் மற்றும் தயாரிப்பாளர் விஜய் பாபு ஆகியோர் இப்படத்தின் மூன்றாம் பாகம் உருவாகும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகர் ஷைஜு குறூப் சமீபத்திய பேட்டியொன்றில், “மலையாள சினிமாவில் இதுவரை டைம் ட்ராவல் அடிப்படையிலான கதைகள் பெரிய அளவில் வந்ததில்லை. அந்த இடைவெளியை இந்த ஆடு 3 படம் நிரப்ப உள்ளது. இது இரண்டு காலக் கட்டங்களில் நடைபெறும் கதை, என்று கூறியுள்ளார்.இப்படம் டைம் ட்ராவல் அடிப்படையில் அமைகிறது என்ற தகவல் தெரிய வந்ததிலிருந்து, ரசிகர்களிடம் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.