இயக்குநர் பிரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள ‘கே.டி. தி டெவில்’ என்ற திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இத்திரைப்படத்தின் சென்னையில் நடைபெற்ற விழாவில் ஷில்பா ஷெட்டி கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், “சென்னை எனக்கு மிகவும் பிடித்த நகரம். பலமுறை நான் படப்பிடிப்புகளுக்காக இங்கு வந்திருக்கிறேன். எனக்குப் பிடித்த தமிழ் உணவு மசாலா தோசை.
தமிழ் திரையுலகில் நான் முதன்முறையாக ‘மிஸ்டர் ரோமியோ’ திரைப்படத்தில் நடித்தபோது, பிரபுதேவா மற்றும் வடிவேலு எனக்கு தமிழ் பேச சொல்லிக்கொடுத்தார்கள். அந்த அனுபவங்கள் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவை. மேலும், விஜய்யுடன் ‘குஷி’ படத்தில் குத்தாட்டம் ஆடிய ஒவ்வொரு நிமிடமும் எனக்கு நினைவில் நிலைத்து இருக்கிறது. ஆனால், அதற்குப் பிறகு எனக்கு பெரிதும் சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் தமிழில் அமையவில்லை. அதனால்தான் தொடர்ந்து தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.