தி செய்லர்மேன் பிக்சர்ஸ் சார்பில் எல். கார்த்திகேயன் தயாரித்து, பிரியா கார்த்திகேயன் இயக்கியுள்ள சுயாதீன திரைப்படம் ‘பேரடாக்ஸ்’ ஆகும். இதில் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மற்றும் மிஷா கோஷல் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை பைசல் வி. காலித் மேற்கொண்டுள்ளார், இசையை கே.எஸ். சுந்தரமூர்த்தி அமைத்துள்ளார். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

சேரன் இயக்கிய ‘பொக்கிஷம்’ திரைப்படத்தில் கதாநாயகியின் தங்கையாக திரைத்துறையில் அறிமுகமான மிஷா கோஷல், பின்னர் ‘நான் மகான் அல்ல’, ‘180’, ‘7ம் அறிவு’, ‘முகமூடி’, ‘ராஜா ராணி’, ‘வணக்கம் சென்னை’, ‘விசாரணை’, ‘மெர்சல்’, ‘லத்தி’, ‘ரத்தம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் கதையின் முக்கிய நாயகியாக நடித்துள்ளார்.
படத்தின் அம்சங்களைப் பற்றி இயக்குநர் பிரியா கார்த்திகேயன் தெரிவித்ததாவது, ‘பேரடாக்ஸ்’ என்ற தலைப்புக்கு தமிழில் ‘முரண்பாடு’ என்ற அர்த்தம் உள்ளது. மனித உளவியல் சார்ந்த கதையை இப்படம் கொண்டுள்ளது. வழக்கமான வாழ்வை வாழும் ஒரு மனிதன், தனது மனைவியிடமிருந்து மற்றும் குடும்பத்திலிருந்து சிறிது சிறிதாக விலகி செல்கிறார். அதே நேரத்தில், ஒரு எதிர்பாராத சம்பவம் நிகழ்கிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதையின் மையம் என அவர் கூறினார்.