பிரபல மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடித்க்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. முன்னணி நடிகர்களும் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்திய ஊடகத்துறையில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக திட்டமிட்டு உருவாக்கி நடத்தி, தனக்கென முத்திரை பதித்துள்ள நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனம், தற்போது திரைப்பட தயாரிப்பிற்குள் நுழைகிறது.

இந்நிறுவனத்தின் சார்பில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் இப்படத்தை தயாரிக்க, இயக்குநராக கிஷோர் ராஜ்குமார் இயக்குகிறார். இவர் ‘நாய் சேகர்’ திரைப்படத்தை இயக்கியவர் மட்டுமல்ல, ‘கோமாளி’, ‘கைதி’, ‘விஐபி 2’, ‘இமைக்கா நொடிகள்’, ‘கீ’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் பல குறும்படங்கள் மற்றும் யூடியூப் வீடியோக்களையும் உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில், பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்குவதோடு, நாயகனாகவும் நடிக்கிறார். ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அன்னா பென் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும் முன்னணி நடிகர்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.படம் குறித்து இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் கூறும்போது, “இது காதலும் நகைச்சுவையும் கலந்த ஒரு கதையாகும். படம் முழுக்க ஃபீல் குட் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை உருவாக்க உற்சாகம் அளித்தவர் பாக்யராஜ் சார் தான். அவரது இயக்கத்தில் வந்த படங்களைப் போல் இன்றைய சினிமாவில் அவ்வளவு நேர்த்தியான படங்கள் இல்லையே என்பதே மக்கள் இடையே ஒரு புலம்பல். அந்த இடைவெளியை நிரப்பவே இந்தப் படம் உதவும்,” என்று தெரிவித்தார்.