‘தசரா’ படத்தின் இயக்குநரான ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில், ‘தி பாரடைஸ்’ என்ற புதிய திரைப்படத்தில் நானி கதாநாயகனாக நடித்துவருகிறார். ஸ்ரீலஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளராக அனிரூத் பணியாற்றுகிறார். ஏற்கனவே வெளியான இந்தப் படத்தின் முன்னோட்ட வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நானியுடன் இணைந்து பணியாற்றும் மற்ற கதாப்பாத்திரங்கள் குறித்து படக்குழு எந்தவித தகவலும் வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்தது. இந்நிலையில், ‘கில்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த ராகவ் ஜூயல், இந்தப் படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
‘கில்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த அவர், அந்தப் படத்தின் மூலம் பாராட்டுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய மொழிப்படத்தில் அவர் முதன்முறையாக நடிக்கும் படம் இதுவாகும். அவருக்கான படப்பிடிப்பு சீன்கள் விரைவில் தொடங்கவுள்ளன. தற்போது ‘தி பாரடைஸ்’ படத்துக்காக உருவாக்கப்பட்ட பிரமாண்டமான செட்டில் நானி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.