இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் நடிகர் வடிவேலு மற்றும் பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாரீசன்’. இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை கலைச்செல்வன் சிவாஜி மேற்கொண்டிருக்க, இசையமைப்பை யுவன் சங்கர் ராஜா செய்துள்ளார். படத்தொகுப்பை ஸ்ரீ ஜித் சாரங் கவனிக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் செய்துள்ளார்.கிராமிய பின்னணியில் உருவான பயணத் திரில்லர் எனப்படும் இந்தத் திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சவுத்ரி தயாரித்துள்ளார். உலகளாவிய ரீதியில் இத்திரைப்படம் வரும் இந்த மாதம் 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.படத்தின் முதல் பாடலாக வெளியான “ஃபாஃபா” என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குநர் சுதீஷ் சங்கர் இப்படத்தின் கதையை சுருக்கமாக பகிர்ந்துள்ளார் அதில், இந்தப் படத்தில் வடிவேலு அல்சைமர் எனப்படும் நினைவாற்றல் குறைபாடால் பாதிக்கப்படுகிறார். ஒரு வங்கியில் அதிகப் பணத்தை எடுக்கிறார். அதைப் பார்த்த திருடன் ஃபஹத் ஃபாசில், அந்தப் பணத்தை எப்படி அவரிடமிருந்து எடுப்பது எனத் திட்டமிடுகிறார். திருவண்ணாமலை வரை செல்லும் வடிவேலுவை வண்டியில் அழைத்துச் செல்கிறேன் எனக் கூறி, அவருடன் பயணம் செய்கிறார். அந்தப் பயணத்தின் போதே, ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு நண்பர்களாகிறார்கள். அதன் பின் என்ன நடந்தது ஃபஹத் அந்தப் பணத்தை திருடினாரா இல்லையா என்பதே மீதிக் கதை என கூறியுள்ளார்.