இந்தி மொழி டிவி தொடர்களில் ‘ஆதிஷ்’, ‘ஹம் ஹை கல் ஆஜ் அவுர் கல்’ போன்றவற்றில் நடித்ததன்மூலம் புகழ் பெற்றவர் ஸ்மிருதி இரானி. ஏக்தா கபூர் இயக்கிய ‘கியூங்கி சாஸ் பி கபி பஹூ தி’ தொடரில் துளசி என்ற கதாபாத்திரம் மூலம் இல்லத்தரசிகளின் இதயங்களை கைப்பற்றினார்.

அதோடு, நிதிஷ் பரத்வாஜ் இயக்கிய ராமாயணத் தொடரில் சீதா வேடத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும், ‘விருத்’ என்ற தொடரை தயாரிக்கவும் செய்திருந்தார். இவ்வாறு சின்னத்திரையில் வெற்றி கண்ட அவர், 2003ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைய நேர்ந்தது. பின்னர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, 2014 முதல் 2024 வரை மத்திய அமைச்சராகப் பதவி வகித்தார். அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் தோல்வியை சந்தித்தார்.
அதையடுத்து, ஸ்மிருதி இரானி மீண்டும் சின்னத்திரை உலகிற்குத் திரும்பியுள்ளார். ஏக்தா கபூரின் ‘கியூங்கி சாஸ் பி கபி பஹூ தி’ தொடரின் இரண்டாம் பாகத்தில், துளசி கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார். இதற்கான புரமோஷன் வீடியோ சமீபத்தில் வெளியானதும், அது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் ஸ்மிருதி இரானிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.