சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள மலையாள திரைப்படம் ‘ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா’ அல்லது ‘JSK’ என சுருக்கமாக அறியப்படும் படம் கடந்த மாதம் வெளியாக இருந்தது. ஆனால், இந்தப் படத்தின் தலைப்பில் இருக்கும் ‘ஜானகி’ என்ற பெயரை நீக்க வேண்டும் என்றும், வசனங்களில் வரும் ‘ஜானகி’ என்பதையும் அகற்றினால்தான் சான்றிதழ் வழங்கப்படும் என தணிக்கை குழு தெரிவித்தது. இதன் காரணமாக, படம் திட்டமிட்டபடி வெளியிடப்படவில்லை.

இதனை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், நீதிபதி கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தைப் பார்த்தார். பின்னர் வழக்கு விசாரணை மீண்டும் நேற்று நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, தணிக்கை குழு பதில் மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில், கதாபாத்திரத்தின் முழுப்பெயர் ‘ஜானகி வித்யாதரன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, படத்தின் தலைப்பை ‘வி.ஜானகி’ அல்லது ‘ஜானகி, வி’ என மாற்றலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்றக் காட்சிகளில் இடம்பெறும் இரண்டு இடங்களில் மட்டும் ‘ஜானகி’ என வரும் பெயரை மியூட் செய்ய வேண்டியிருக்கும். மற்ற இடங்களில் பெயரை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. இம்மாற்றங்களை ஏற்றுக்கொண்டால், உடனடியாக சான்றிதழ் வழங்கத் தயாராக உள்ளோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் இதை ஏற்றுக்கொண்டதால், வழக்கு விசாரணை ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.