மோகன்லால் நடித்தும், அவரது 360வது திரைப்படமாக வெளியான ‛தொடரும்’ கடந்த சில மாதங்களுக்கு முன் திரைக்கு வந்து பெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து சமீபத்தில் வெளிவந்த “கண்ணப்பா” திரைப்படத்திலும் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் “ஹிருதயபூர்வம்”, தெலுங்கில் உருவாகும் “விருஷபா”, அதன் பின் “திரிஷ்யம்-3” என பல படங்கள் அவரது நடிப்பில் தயாராகி வருகின்றன.

இந்நிலையில், தனது 365வது படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை மோகன்லால் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தை இயக்குவதற்காக, இயக்குநராக அறிமுகமாகும் ஆஸ்டின் டான் தாமஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான மிகப்பெரிய ஹிட்டான “அஞ்சாம் பாதிரா” திரைப்படத்தில் முதன்மை துணை இயக்குநராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மோகன்லால், ஒரு புதிய இயக்குநருடன் பணியாற்றும் முடிவை எடுத்திருக்கிறார் என்பதிலும் ரசிகர்கள் ஆச்சரியம் தெரிவிக்கின்றனர்.
மேலும், “இஷ்க்” மற்றும் “ஆலப்புழா ஜிம்கானா” போன்ற வெற்றிப் படங்களுக்கு கதை எழுதிய ரத்தீஷ் ரவி இந்தப் படத்திற்கும் கதையை வழங்குகிறார். இப்படத்தை பிரபலமான ஆசிக் உஸ்மான் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டரில் கக்கி வண்ண ஆடை காணப்படுவதால், இந்தப் படத்தில் மோகன்லால் ஒரு போலீஸ் அதிகாரியாகவே நடிக்க இருக்கலாம் என எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.