இயக்குனர் கோபி இயக்கத்தில், புதிய நடிகர் தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘யாதும் அறியான்’ திரைப்படக் குழுவை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். சின்னத்திரையில் இருந்து சினிமா உலகிற்கு வந்து, பலவிதமான சவால்களை கடந்து சாதனைகள் புரிந்து, இன்றைய தினம் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன். வித்தியாசமான முயற்சியில் ஈடுபடுகிற புதிய படக்குழுக்களை அவர் எப்போதும் ஊக்குவித்து பாராட்டுவதில் தலைசிறந்தவர்.
அந்த வகையில், பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘யாதும் அறியான்’ படக்குழுவை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படத்தை கோபி இயக்கியுள்ளதுடன், கதாநாயகனாக புதுமுக நடிகர் தினேஷ் நடித்துள்ளார். அவருடன் அப்புகுட்டி, தம்பி ராமையா, கே.பி.ஓய் ஆனந்த பாண்டி, ப்ரணா மற்றும் சியாமள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
படத்திற்கு ஒளிப்பதிவாளராக எல்டி பணியாற்றியுள்ளதுடன், இசையமைப்பாளராக தர்மபிரகாஷ் செயல்பட்டுள்ளார். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் இடம்பெற்ற ‘மலரே… தினமே…’ என்ற பாடல் சரிகம தமிழ் யூடியூப் சேனலில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பாடலுக்காக பாடலாசிரியர் எஸ்.கே. சித்திக் வரிகள் எழுத, சூப்பர் சிங்கர் புகழ் அருள்பிரகாசம் பாடியுள்ளார்.
தற்போது, படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு, நடிகர் தினேஷ், இயக்குனர் கோபி, ஒளிப்பதிவாளர் எல்டி, பாடலாசிரியர் சித்திக் ஆகியோர் சிவகார்த்திகேயனை சந்தித்து அவரது வாழ்த்தைப் பெற்றனர். டிரைலரை பார்த்த சிவகார்த்திகேயன், “இதில் ஒரு திரில்லர் படம் போலவே காட்சிகள் அமைந்துள்ளன. வருடங்களை மாறி மாறி காட்டும் விதத்தில் ஒரு வித்தியாசமான அம்சம் இருப்பது தெளிவாக தெரிகிறது. படத்திற்கு வாழ்த்துகள்,” என பாராட்டினார். ‘யாதும் அறியான்’ திரைப்படம் இந்த மாதம் திரைக்கு வர உள்ளது.