மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பைசன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார் துருவ் விக்ரம். அடுத்ததாக தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடித்த ‘வீரா’, ‘கிலாடி’, மேலும் தமிழில் வெற்றி பெற்ற ‘ராட்சசன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் ‘ராட்சசுடு’ ஆகியவற்றை இயக்கிய ரமேஷ் வர்மா உடன் புதிய படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார்.

இதற்கிடையே, இந்த படம் 2024ஆம் ஆண்டு வெளியான ஹிந்தி ஆக்ஷன் ஹிட் படம் ‘கில்’ இன் ரீமேக் என இணையத்தில் தகவல்கள் பரவியிருந்தது. ஆனால் இயக்குநர் ரமேஷ் இந்த தகவலை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், “நான் துருவ் விக்ரம் உடன் ‘கில்’ படத்தின் ரீமேக்கில் பணியாற்றவில்லை. ஆனால், அவருடன் அடுத்த ஆண்டு புதிய படமொன்றை தொடங்க உள்ளேன். அது ஒரு காதல் கதையாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
ஆனாலும், ‘கில்’ படத்தை ரீமேக் செய்யும் திட்டம் தனக்கு இருப்பதாகவும், அதில் வேறு நடிகர் நடிப்பார் என்றும் அவர் கூறினார். அந்த நடிகராக பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் தேர்வாக இருக்கலாம் எனவும், அவருடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.