பூமியில் காய்கறி மற்றும் பழ வகைகள் மட்டுமின்றி, விலங்கினங்களிலும் மரபணு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோலவே மனிதனின் மரபணுவிலும் மாற்றம் நிகழ்ந்தால் என்ன ஆகும் என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் ‘கைமேரா’. மாணிக்ஜெய் இயக்கியுள்ள இந்தப் படத்தில் புதுமுக நடிகர்கள் நடித்துள்ளனர்.

மனித உடலில் மிருகங்களின் செல்கள் சேர்க்கப்பட்டால், அதனால் மனித குணம் மிருகத்தின் போல் மாறும் என்பதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்ற கருத்தையே இந்தக் கதையின் மையமாக கொண்டுள்ளனர். ‘கைமேரா’ என்பது மராத்தி மொழியிலிருந்து வந்த வார்த்தை. இதற்கு மரபணு மாற்றம் அல்லது மரபியல் கலவைக் குணம் என்ற பொருள் இருக்கிறது.
இதேபோல், கிரேக்க புராணக் கதைகளில் பல்வேறு விலங்குகளின் உடற்கூறுகளைக் கொண்ட கொடூர மிருகத்திற்கும் ‘கைமேரா’ என்ற பெயரே வழங்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் கதை பெங்களூரைச் சுற்றி நடைபெறுவதால், கர்நாடகாவின் பெங்களூர், ஹம்பி மற்றும் தமிழகத்தின் ஓசூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள எத்தீஷ், மரபணு மாற்றத்தால் பாதிக்கப்படும் மனிதனின் மனநிலையை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்துக்காக முழுமையாக அந்த மனநிலைக்கு இணையாக நடித்துள்ளார். இதன் விளைவாக படப்பிடிப்பு முடிந்து இரண்டு மாதங்கள் வரை அந்த பாதிப்பிலிருந்து மீள முடியாமல் இருந்த அவர், மருத்துவ சிகிச்சை மூலம் தான் அதிலிருந்து மீண்டிருக்கிறார். இப்படத்தில் மனிதனும் பாம்பும் இணைந்துள்ள மாதிரியான கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் பான் இந்தியா படமாகும்.