இந்திய சினிமா இதுவரை கண்ட சாதனைகளை கடந்து புதிய வரலாற்று சாதனையை உருவாக்கும் நோக்கில் ‘ராமாயணம்’ திரைப்படம் தயாராகி வருகிறது. பிரபல இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கும் இந்த புராண அடிப்படையிலான படமாகும். இது சுமார் ரூ. 835 கோடி செலவில் உருவாகி வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ‘ராமாயணம்’ திரைப்படம், இந்திய சினிமாவின் மிகுந்த செலவில் தயாரான படம் என்ற சாதனையை நோக்கி நகர்கிறது.
இதுவரை அதிக பட்ஜெட்டில் தயாரான ‘கல்கி 2898 ஏ.டி’ (ரூ. 600 கோடி), ‘ஆர்.ஆர்.ஆர்’ (ரூ. 550 கோடி), ‘ஆதிபுருஷ்’ (ரூ. 550 கோடி) ஆகிய திரைப்பட பட்டியலில் இந்த படம் முதல் இடத்திற்கு செல்லும். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது. பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ராமராகவும், தென்னிந்திய நடிகை சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர்.
‘கேஜிஎப்’ புகழ் யாஷ் ராவணனாக நடிக்கிறார். மேலும், சன்னி தியோல், விவேக் ஓபராய், ராகுல் ப்ரீத் சிங், லாரா தத்தா, காஜல் அகர்வால், அருண் கோவில், ஷீபா சதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரிக்கச் செய்யும் வகையில், இந்தப் படத்தின் முதல் லுக் கடந்த 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்படத்தின் முதல் பாகத்தை அடுத்த ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடவும், இரண்டாம் பாகத்தை 2027-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.